Saturday, 11 July 2020

திருமண வாழ்வில் இன்பநிலை எய்திட...(1)

திருமணம் வாழ்வில் இன்பநிலை எய்திட...(1)


                           

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

"கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸிடம்" திருமணம் செய்துகொள்வது நல்லதா அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லதா ?" என குசும்புக்கார இளைஞன் கேட்க அதற்கு அவர் "இந்த இரண்டில் எந்த முடிவை எடுத்தாலும் பின்னால் நீ வருத்தப்படுவாய் " என பதிலளித்தார்.

  ஆம். அன்பர்களே திருமணம் செய்தவர்களிடம்  கேட்டால் அவர்கள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வரவே விரும்புகிறார்கள். திருமணம் செய்யாதவர்கள் அதைப் பற்றிய பலவித கற்பனை உணர்வோடு அந்த வட்டத்திற்குள் நுழைய ஆசைப்படுகிறார்கள்.

 இந்த உன்னத காதல் உணர்வினை பயன்படுத்தி கவிஞர்களும், கலைஞர்களும் இளைஞர்களின் கற்பனை உணர்வினை  தூண்டி மிதக்க செய்துவிடுகிறார்கள்.

  இன்றைய காலகட்டத்தில் நான்கு இளைஞர்கள்  ஒன்று கூடி  பேசும் குசு ,குசு பேச்சும் மற்றும் கிண்டல் பேச்சும் என்னவென்று பார்த்தால் வருங்கால வாழ்க்கைத்துணையை பற்றியதாகவே இருக்கும்.

  "திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்"

 "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

   "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது.

இன்றைய நவநாகரிக இளைஞன் தனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி சோதிடர்கள் உதவி இன்றி தானே தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

    இளைஞர்கள் தனது திருமண வாழ்வு பற்றி சாதகத்தில் தெரிந்து கொள்ள பன்னிரண்டு ராசி கட்டம் உள்ள ஜாதக கட்டத்தில் நான்கே நான்கு கட்டங்களைப் பற்றி ஆய்ந்தறிந்தாலே போதும் அவை என்னவென? நீங்கள் கேள்வி கேட்பது என் காதில் விழுகிறது. அவையாவன

1) லக்கனம் என்னும் சாதகர்,
2) இரண்டாமிடம் என்னும் குடும்ப ஸ்தானம்,
3) ஏழாயிரம் என்னும் களத்திர ஸ்தானம்,
4) மாங்கல்ய ஸ்தானம் என்னும் ஆயுள் ஸ்தானம்.

    இதேபோல திருமண வாழ்வு பற்றி அறிய நவ கிரகங்களில் களத்திர காரகன் சுக்கிரன் பகவான், மங்கள காரகன் அல்லது காம காரகன் எனும் செவ்வாய் பகவான் மற்றும் புத்திரகாரகன் எனும் குருபகவான் ஆகிய மூன்று கிரகங்களின் நிலை பற்றியும் ஆய்ந்தறிய வேண்டும்.

                       

   இளவயதில் திருமணம் நடைபெற..


   ஒருவரது ஜாதகத்தில் திருமணம் உரிய வயதில் தடையின்றி நடக்க திருமணம் ஸ்தானமான கருதப்படும் 1,2,7 ,8 ஆகிய இடங்களில் இயற்கை பாவிகளான சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்களும், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் எவ்விதத்திலும் தொடர்பற்று இருக்க வேண்டும்.

  இவை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட ஸ்தானங்களின் அதிபதிகள் உச்சம்,மூலதிரிகோணம், ஆட்சி மற்றும்  நட்பு போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர அல்லது கோணம் ஏறி இயற்கை சுப கிரகங்களின் பார்வையைப் பெற்று கோசார அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டமச்சனி நடைபெறாமல் உகந்த திசை இளம்வயதில் நடப்பில் இருப்பின் அந்த ஜாதகருக்கு இளவயதிலே திருமணம் நடைபெறும் என்பது திண்ணம் ஆகும்.

 விதிவிலக்காக திருமண ஸ்தானாதிபதியான 1,2,7,8 ஆம் அதிபதிகள் மறைவிடங்களிலோ, பகை, வக்கிரம் , நீசம், அஸ்தமனம் போன்ற நிலைகளில் பலவீனப்பட்டு இருப்பின் வளர்பிறைச் சந்திரன் இயற்கை சுப கிரகங்களான குரு மற்றும் சுக்ரன் தொடர்புகளை பெரும்பொழுது அதன் தசை காலங்களில் இளவயதில் திருமணம் நடைபெறும்.

  நவ கிரகங்களில் ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் என்றும் பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய் பகவானின் மற்றும் புத்திரகாரகன் குரு பகவான் ஆகிய மூன்றும் எவ்விதத்திலும் பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும் மூன்று கிரகங்களும் சனி செவ்வாய் ராகு மற்றும் கேது தொடர்பற்று கேந்திர மற்றும் கோணம் ஏரி இயற்கை மற்றும் சாதி அடிப்படையிலான சுபக்கிரகங்களின் தொடர்பினை பெற்றிருக்க வேண்டும்.

   மேற்கண்டவற்றை இலக்கனம் மற்றும் ராசி என்னும் இரு வழிகளை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 விதிவிலக்காக குரு சுக்ரன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றுடன் பாவ கிரகங்களின் சம்பந்தம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள வகையில்(பகை,நீசம்,மறைவு, அஸ்தங்கம்,வக்கிரம்...) பலவீனம் அடைந்துள்ளார் எனில் வளர்பிறைச் சந்திரன் குரு ,சுக்கிரன்  தொடர்பினை பெரும்பொழுது நல்ல பலனைத் தரும் வாய்ப்பை அடைகிறார்.

                       

  தங்கமான புருஷன் யாருக்கு?



 ஏழாமிடத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், பாவியுடன் சேர்க்கை பெறாத புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்கள் இடம் பெற்று இவர்கள் லக்னத்திற்கு சுப  ஆதிபத்தியம் பெற்று பாவர்கள் தொடர்பற்று திகழ வேண்டும் .
மேலும் ஏழாம் அதிபதி கேந்திர மற்றும் கோணங்களில் பலம் பெற்று சுபர்களின் சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும்.

  எனது அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் சரியான ஒத்த கருத்தை வலியுறுத்தும் பாடலொன்று "ஜோதிட சில்லரை கோவை" என்னும் நூலில் உள்ளது.

  "பொன்னவன் புதனும் சந்திரன் புகரும் ஏழிடத்திருந்தால்
கன்னிகைதனை மணப்போன்
கல்வியும் பொருளும் வாய்த்து மன்னவன் போலிருப்பான்  மங்கையை மணம் புரிந்து பொன் பொருள் பூஸ்தியோடு அன்பாய் பொருந்தி வாழச் செய்வாரே !"

(பொன்னவன்-குரு
     புகர்-சுக்கிரன்)

                     


கால தாமத திருமணம் யாருக்கு?


  ஒருசிலருக்கு அழகு, அந்தஸ்து மற்றும் படிப்பு எல்லாம் நிரம்பப் பெற்று இருந்தாலும் திருமணம் கால தாமதம் ஆகிக் கொண்டே செல்வதற்கும் அல்லது ஒரு சிலருக்கு இளவயது திருமணம் நடந்து இருந்தாலும் அவர்களுக்கு இடையே அன்யோன்யம் இல்லாமல் போய் விடுவதற்கும் கிரகங்கள் நடத்தும் கோளாட்டமே காரணமாக அமைகிறது.

  ஒருவர் ஜாதக கட்டத்தில் இலக்கனம் என்னும் சாதகர்,குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் ,களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இடங்களில்  மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனுடனும் பாவிகளான சனி மற்றும் செவ்வாய்  மற்றும் நிழற் கிரகங்களான  ராகு ,கேது மேற்கூறிய நான்கு அதிபதிகளும் பலவீனப்பட்டு கோசார அடிப்படையில் ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி போன்றவை நடப்பில் இருந்து லக்ன பாவிகள் திசையோ அல்லது மறைவிட ஸ்தான அதிபதிகளின் திசையோ அல்லது பாவம் பெற்ற சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது புத்தி தசையோ  அல்லது புத்தியோ நடப்பில் இருப்பின் கால திருமணத்தை கட்டாயம் தரும்.

  சரியாக ஆய்ந்து அறியாமல் மேற்கூறிய அமைப்பை உடையவர்களுக்கு இளவயதில் திருமணம் நடந்திருப்பின் அவர்களுக்கு இடையே மேற்கூறப்பட்ட தசை மற்றும் புக்தி காலங்களில் பிரிவினையையோ அல்லது ஒரே வீட்டில் இருந்தாலும் சண்டை சச்சரவு மூலமாக வாழும் சூழல் உருவாகலாம்.

   அன்பும், ஆதரவும் கிட்டாத கணவன் அமைய காரணம். :-

   பெண்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது இவர்கள் நின்று அவர்களுக்கு அந்த வீடு பகை வீடு அல்லது நீச வீடாகவும் அமைந்து ஏழாம் இடத்தையும் ,  ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனையும் சுபர்கள் பார்க்கவில்லை எனில் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் மற்றும் ஆனந்தமும் கிட்டாது.

மேற்கூறிய இக்கருத்தை வலியுறுத்தும் பாடல் பெரிய ஜோதிட சில்லரைக் கோவை என்னும் நூலில் உள்ளது.

"மந்தனும் ராகு கேது மன்னிய ஏழில் உற்றால்
சுந்தரிதனை மணப்போன்
சோம்பனும் துஷ்டனுமாகி
பந்துமித்திரர் நிந்திக்க பலநாளும் துன்புற்று
சிந்தை நொந்து உருகி வாடச்செய்குவீர் கவனிப்பீரே"

(மந்தன்-சனி)

                     

காதலித்த பெண்ணே மனைவியாக அமைய....


 "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்"

   ஒருவர் காதலித்த பெண்ணையே கைபிடிப்பாரா ?  என ஆய்வு செய்து பார்க்க வேண்டுமாயின் அவரது ஜாதக கட்டத்தில் ஐந்தாமிடம், ஏழாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

  இதற்கான சில விதிமுறைகளாவன:-

    1) ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் மற்றும் ஒன்பதாம் அதிபதியும் ஒன்றுக்கொன்று சேர்க்கை , பார்வை மற்றும் பரிவர்த்தனை வகையில் தொடர்பு கொண்டு கேந்திரம் கோணம் தனம் மற்றும் லாப ஸ்தானத்தில் தொடர்பு கொண்டு இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பைப் பெற்றவர்கள் காதலித்த பெண்ணையே மனைவியாக பெற்று நீடித்த மகிழ்ச்சியுடன் தீர்க்காயுளுடன் வாழ்வான் இந்த கருத்தை வலியுறுத்தும் சோதிட மாலை என்ற நூலில் இடம்பெற்றுள்ள பாடல் "ஜோதிட மாலை "என்ற சோதிட நூலில் இடம்பெற்றுள்ள பாடல்
பின்வருமாறு

"கூறும் ஏழாமிடத்தோன் குணமிகு நவத்தில் தோன்றிட சீறும் பஞ்சமத்தோன் இன்பமாய் இணைந்துட்டாலும் ஏறும் பாக்கியத்தோன் இருவரையும் கண்ணூற்றாலும்  மாறும் புவியில் பிறந்தோர் காந்தருவம் புரிவான் தானே!

(காந்தருவம்-காதல் மணம்)

 இவை தவிர வேறு சில விதிகள்

      2) ஐந்தாம் அதிபதி மற்றும் லக்னாதிபதி பரிவர்த்தனை,

    3) ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதியும், மனோகாரகன் சந்திரன் பகவானும் இணைந்து பலம் பெற்று நல்ல இடங்கை அமர்ந்துவிட்டால் காதல் வசப்படுவார்.

  4) ஒருவரின் வாழ்க்கை துணையை குறிப்பது  ஏழாம் பாவகம் ஆகும்.இந்த ஏழாம் அதிபதியும் , களத்திர காரகன் சுக்கிரனும் இணைந்து இவருடன் 5ஆம் அதிபதியும், லக்கினாதிபதியும் தொடர்பு பெற்றால் காதல் வலிமை பெறும் என்பது திண்ணம் ஆகும்.

 5) ஒருவர் காதல் வாழ்வில் வெற்றி பெற குரு பகவானும் மற்றும் பாக்கியாதிபதி இன் அருளாசியும் தேவைப்படுகிறது.

 6) ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் பகவானுடனும் மற்றும் காமகாரகன் செவ்வாய் பகவானுடனும் ராகு பகவான் இணைந்து சனியின் பார்வை பெற்ற அமைப்பு பெற்றவர்கள் காதல் மற்றும் கலப்பு மணம் நடைபெறும்.

7) ஒருவர் காதல் வாழ்வில் வெற்றி பெற குருபகவான் மற்றும் பாக்கிய அதிபதியின் அருளாசி தேவைப்படுகிறது.

வெறுப்பும் பகை உணர்வும் கொண்டுள்ள மனைவி அமைய;-


  ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பன்னிரெண்டாம் பாவத்தில் மறைந்தும், ஏழாம் இடத்தில் பாவர்கள் அமர்ந்தும், களத்திரகாரகன் சுக்கிரன் இருக்கும் இடத்திற்கு எட்டாமிடத்தில் மனோகாரகன் சந்திரன் மறைந்தும் மற்றும் ராசிக்கு ஏழாம் அதிபதி ஆறில் மறைந்தாலும் வெறுப்புணர்வு கொண்ட மனைவி அமைவாள் இந்த ஆழமான கருத்தை வலியுறுத்தும் பாடல் "வசிஸ்ட சிந்தாமணி" என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

உன்னிய ஏழுக்காதி ஒரு பனிரெண்டில் நிற்க, மன்னிய சுங்கர்க்கு எட்டில் மாந்தியும் பிறையும்கூட, துன்னிய ஏழில் தீயர் சூழ்ந்தும் இருப்பாராகில் மின்னிய தாரம் தானும் மிகுபகை அருந்தவத்தாய்"

  மேற்கண்ட இந்த விதிகளை மட்டுமல்லாமல் பொதுவாக வெறுப்பும் பகை உணர்வும் கொண்ட மனைவி அமைவதற்கு இலக்கனம் மற்றும் ராசிக்கு திருமண ஸ்தானமான 1 ,2 ,7 ,8 -ஆம் இடங்களுடனும் அதன் அதிபதிகளுடனும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனுடனும் சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவிகள் நிழற்கிரகங்களான ராகு மற்றும் கேது தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
                           

மனைவியால் செல்வம் சேரும் யோகம் :-

  ஒருவரது ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் நண்பர்களாக அமைந்து சுப மனையேறி ஏழாம் அதிபதியானவர் பத்தாம் இடத்தில் அமர்ந்து மற்றும் பத்தாம் அதிபதி ஏழாம் இடத்தில் பரிவர்த்தனை பெற்று சுபர்களின் பார்வை பெற்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் திருமணத்திற்கு பிறகு தொழிலில் மேன்மை அடைந்து செல்வந்தனாக உயர்வு அடைவார்.

 மேற்கண்ட இவர்களுடன் தான மற்றும் லாபாதிபதி எவ்விதத்தில் தொடர்புகொண்டு இருப்பின் திசை வரும் காலங்களில் மனைவி வந்த பிறகு நடப்பின் கோடீஸ்வரராக உயர்வது உறுதி ஆகும்.

  இந்தக் கருத்தை வலியுறுத்தும் "சாதக அலங்காரம் "என்னும் பழம்பெரும் சோதிட நூலில் இடம்பெற்றுள்ள பாடலைக் காண்போம்.

 "
எடுத்த பத்தாமாதிபதி ஏழிறை
கடுத்த மித்திரராகிப் பலனுடன்
கொடுத்த உத்தமர் வீட்டினில் சூழ்ந்திடப் படைத்த பாரியினால் வரும் பாக்கியம்"

               

மாங்கல்ய பலம் இழப்பதற்கு...


 ஒரு சிலர் சாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதியும், மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரனும் சிறப்பாக இருந்தாலும் சில பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்காமல் குறைந்து விடுவது ஏன்? என ஆய்ந்து நோக்கினால் "பூர்வ பராச்சர்யம்" என்னும் நூல் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்க ஒன்பதாம் இடத்தை ஆராய வேண்டும் என வலியுறுத்துகிறது.

  ஒன்பதாம் அதிபதி நீசம், அஸ்தங்கம் ,பகை மற்றும் வக்கிரம் அடைந்தவுடன் சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு கணவன் மூலம் கிடைக்கும் சௌக்கியம் கிட்டாது. கணவன் குறைந்த ஆயுள் உடையவனாக இருப்பான்.

  "ஜாதக அலங்காரம்" எனும் நூலில் பெண்கள் பகுதியில் மேற்கண்ட இந்த கருத்தை வலியுறுத்தும் பாடல் ஒன்று உள்ளது. அதனை வாசகர்கள் பயன்படும் வகையில் இங்கு தருகிறேன்.

"எழிலொன்பான் மனைக்கதிபன் ரவியுடன் கூடில்
பாக வியமொட்டாறைப் ஒன்பான் மனையோன்
பரிந்திருந்த வீட்டோனைப் படியிருக்கில் விதவை"

பாடல் விளக்கம்,

 பெண்கள் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் அதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்கம் ஆகி
 6, 8 12ஆம் இடங்களில் மறைந்து அவ்வீட்டோனுடன் கூடி இருந்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை இழக்கும் அமைப்பு வந்துவிடுகிறது.

(தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம்.)

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
   9715189647

  செல்
  9715189647
‌.   7401570899

                         

 அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் ),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

Email; masterastroravi@gmail.com,

My blog

www.AstroRavichandran.blogspot.com

www.AstroRavichandransevvai.blogspot.com.

...

No comments:

Post a Comment