"கோடீஸ்வரர் ஆகும் யோகம்"
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு தனிமனித லொளகீக வாழ்வில் சிறப்பான அந்தஸ்தை பெற பொருளாதாரம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஒருவரது ஜெனன ஜாதகத்தை வைத்து ஒரு மனிதனின் பொருளாதார உயர்வையும், தாழ்வையும் தெளிவாக தீர்மானித்து விட முடியும்.
பொதுவாக ஒரு தனி மனிதனுடைய பொருளாதார நிலையை கீழ்காணும் மூன்று வகைகளில் பிரிக்கலாம்.
1) ஏழையாகப் பிறந்து அந்திம காலம் வரை ஏழையாகவே வாழ்ந்து மறைவது.
2) பிறக்கும்போது சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும், சாதக யோகத்தாலும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நிலையில் வெற்றியடைந்து கோடீஸ்வரனாக வாழ்ந்து கொண்டிருப்பது.
3) நிறைவாக கோடிஸ்வரன் வீட்டில் பிறந்து கோடீஸ்வரனாகவே காலம் முழுவதும் வாழ்ந்து மறைவது.
மேலே குறிப்பிட்ட மூன்று வகைகளில் இரண்டாவதாக குறிப்பிட்ட வகையை சார்ந்த தனி மனித சாதகத்தினை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு "கோடீஸ்வரர் ஆகும் யோகத்தினை " விளங்கிக் கொள்ள முற்படுவோம்.
ஒருவர் செல்வந்தனாக வாழ்வதற்கு பலவிதமான யோக அமைப்புகள் சாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் திசைகள் இளமைக்காலத்தில் நடைமுறைக்கு வரவேண்டும் .
அவ்வாறு வந்தால்தான் அந்த யோகம் ஜாதகருக்கு பயன் உள்ளதாக அமையும். அத்துடன் மட்டுமல்ல அந்த யோகத்திற்கும் மதிப்பு கிடைக்கும்.குழந்தை பருவத்தில் அல்லது முதுமைப் பருவத்தில் வந்தால் பயனில்லை.
ஒருவருக்கு அவரது ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களை
முழுமையாக அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பலம் பெறாத பட்சத்தில் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதனால் ஜாதகருக்கு பயன் இல்லை.
மக்கள் வாழ்விற்கு ஒரு நாட்டின் முதலமைச்சர் என்னதான் திட்டமிட்டாலும் , அதனை நடைமுறைப்படுத்த நல்ல அமைச்சர்கள் இருந்தால்தான் அத்திட்டம் மக்களிடம் சென்றடையும்.அதேபோல ஒருவர் ஜாதகத்தில் உள்ள யோகங்களை நடைமுறைக்குக் கொண்டுவர அவரது ஜாதகத்தில் "பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி" எனப்படும் ஐந்தாம் அதிபதியும் பலம் பெற்றிருக்க வேண்டும்.இவருடன் பாக்யாதிபதியான ஒன்பதாம் இட அதிபதி சம்பந்தப்பட்டால் யோகத்தை விருத்தி படுத்துவார்.
ஒருவருடைய சாதகத்தில் பொருளாதாரத்திற்கு அடிப்படையான கிரகமான இரண்டாம் அதிபதியும், மிகுந்த லாபத்தை தரக்கூடிய பதினொன்றாம் அதிபதியும் இணைந்து இவர்களுடன் பலம்வாய்ந்த லக்னாதிபதியும் சேர்ந்து வலிமையான பஞ்சமாதிபதியோ அல்லது பாக்கியாதிபதியோ சம்பந்தப்பட்டு இவர்களின் தசா புக்தி நடைமுறைக்கு வரும் காலங்களில் ஒருவர் கோடீஸ்வரர் ஆவது உறுதி ஆகும்.
இந்த கருத்தினை வலியுறுத்தும் சோதிட பாடல் ஒன்று "கொளசிக சிந்தாமணி"-என்னும் சோதிட நூலில் உள்ளது.
"ஜென்மத்தோன் இரண்டோன் இன்னம் சேர் பதினொன்றோனும்
திண்ணிய மித்திரரோடு திரிகோண கேந்திரம் நின்று
மண்ணிற் பிறந்தோன் நல்ல மாசிலா சுகத்தோடு எண்ணி நாலாயிரம் பொன் இன்பமாய் சேர்ப்பான் கண்டாய்"
--(பாடல் -74)
பாடல் விளக்கம்:
ஒருவரது சாதகத்தில் லக்கனாதிபதி எனப்படும் ஜென்மத்தோன்,
தனாதிபதி எனப்படும் இரண்டாம் இட அதிபதி மற்றும் லாபத்தை தரக்கூடிய பதினொன்றாம் அதிபதியும் நட்பு கிரகங்களின் சேர்க்கையை பெற்று கேந்திர திரிகோணம் ஏற சாதகர் நல்ல எல்லா சுகங்களை அனுபவிக்க கூடியவராகவும் , நாலாயிரம் பொன் சேர்த்தும் வைத்திருப்பார்.
இன்று மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் மதிப்பிடும் தரத்திலும் ,விலையிலும் உயர்ந்து கொண்டிருக்கும் தங்கம் அணிகலன்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
அன்றைய காலகட்டத்தில் நான்காயிரம் பொன் இன்பமாய் சேர்ப்பான் என்று விஸ்வாமித்திரர் பாடியுள்ளார். இன்று ஒரு பொன்னின் (பவுன்) விலை கிட்டதட்ட ரூபாய் முப்பதாயிரம் நெருங்குகிறது எனில் நாலாயிரம் பவுன் விலையினை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
பாடலின் விதிப்படி நடுத்தர வர்க்கத்தில் பிறந்து இன்று கோடீஸ்வரனாக உலாவரும் இரண்டு உதாரண சாதகங்களை எடுத்துக் கொண்டு விளங்கி கொள்ள முற்படுவோம்.
முதல் சாதகம்
பிறந்த தேதி
14-11-1960
நேரம் : 2.15 PM
லக்கனம் ; மீனம்
ராசி : கன்னி
நட்சத்திரம்; உத்திரம்
சூரிய திசை; 4 வருடம் 5 மாதம் 15 நாள்
இவருடைய சாதகத்தில் லக்கனம் , ஜீவன ஸ்தானாதிபதியும் மற்றும் தனகாரகனுமான குருபகவான் , லாபாதியுமான சனிபகவானுடன் சேர்ந்து தனம் மற்றும் பாக்கியாதியான செவ்வாய் பகவானை பார்த்து மிகுந்த தனயோகம் பெற்றவராக திகழ்ந்தார்.தனகாரகர் குருபகவான் அம்ச பீடத்தில் உச்சமடைந்தும் பலமடைந்து உள்ளார்.
இவரது சாதகத்தில் கொளசிக சிந்தாமணி பாடலில் குறிப்பிட்டுள்ளபடி லக்னாதிபதியான குரு பகவான், தன மற்றும் பாக்கிய அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் லாபாதிபதியான சனிபகவான் ஆகிய மூவரும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று தொழில் ஸ்தான சம்பந்தம் பெற்று உள்ளது.
மேலும் தர்மாதிபதியான செவ்வாய் பகவான்,கர்மாதிபதியான குரு பகவானும் சமசப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது "தர்ம-கர்மாதிபதி " யோகம் ஆகும்.
இந்த தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றவர்கள்
"சொல்லுமையா பாக்கியத்தோன் பத்தோன் கூடி
சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா
தனம் படைத்து வாழ்வதோடு
எவர்களுமே
பணிவார்கள்
இறைவன் போல
தொல்லையில்லான்
பல பேரை காக்க வல்லோன்
துணையாளர் பலபேரும்
உண்டு பாரு ".
இதன்படி தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற ஜாதகர் மக்கள் செல்வாக்கும், அந்தஸ்தும் பெற்று விளங்கும் கோடீஸ்வரராக திகழ்கிறார்.
மேலும் இவரது ஜாதகத்தில்
"விளையும் புதனும் சூரியனும் விரும்பி
எட்டுநான்கு கொன்றில்
வளையக்கூடின் மன்னவனாம்"
இவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் அமர்ந்து மன்னனுக்கு நிகரான செல்வ வளம் பெற்ற கோடீஸ்வரர் ஆக திகழ்கிறார்.
சாதகரது ராசி கட்டத்தில் ஆட்சி பெற்று , அம்ச பீடத்தில் உச்சம் பெற்ற லக்கனாதிபதி மற்றும் தொழில் ஸ்தானதிபதியான குருபகவான் அத்துடன் இணைந்துள்ள ஏனைய கிரகங்களான சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி பகவானை விட பலம் பொருந்திய நிலையிலும், உரிய பொருள் ஈட்டும் வயதிலும் வந்து தனது திசையில் நூல் துறையில் ஈடுபட்டு, வெளிநாட்டு தொடர்பும் பெற்று பல கோடிகளை சம்பாதித்து உள்ளார்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு ஆட்சி பெற்று "ஹம்ச யோகம்" அடைந்துள்ளது மிகவும் சிறப்பானது.
சாதகம் -(2)
பிறந்த தேதி ; 19.05.1973
பிறந்த நேரம்; பகல் 1-15
பிறந்த நட்சத்திரம்: கேட்டை
புதன் திசை இருப்பு: 2 வருடம் 9 மாதம் 22 நாள்
லக்கனம்; சிம்மம்
ராசி: விருச்சிகம்
இவரது ஜாதகத்தில் கொளசிக சிந்தாமணி சோதிட நூலில் குறிப்பிட்டுள்ள படி சிம்ம லக்னாதிபதியான சூரியன் பத்தாமிடத்தில் திக் பலம் பெற்று ,தனம் மற்றும் லாபாதிபதியான புதன் பகவான் உடன் சேர்ந்து , பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் நான்காம் பார்வையாக இவ்வீட்டினை நோக்க ,
வீடு கொடுத்த ஜீவன ஸ்தான அதிபதியான சுக்கிரன் பகவான் ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஆட்சி ஸ்தான வலிமையுடன் வர்க்கோத்தமம் பலமும் பெற்று சந்திரனுக்கு கேந்திரத்திலும் நின்று பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான " மாளவிகா யோகம் " பெற்றுள்ளது.
ஆறு மற்றும் ஏழாம் அதிபதியாக சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தில் இருப்பதால் கல்குவாரி தொழிலிலும், வாகனங்களுக்கு கடன் வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டு சுக்கிரன் திசை பின்பகுதி முதல் சூரியன் திசை முழுவதும் பெரும் வளர்ச்சி அடைந்து கோடீஸ்வரராக ஆனார்.
இதுபோன்ற இன்னும் பல கோடீஸ்வரர் சாதகங்களை ஆய்வு செய்து பார்த்து எனது அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் "ஒருவரின் ஜாதகத்தில் தனாதிபதியும், லாபாதிபதியும் இவர்களுடன் லக்கினாதிபதியும் இணைந்து கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று பத்தோன் சம்பந்தமும் பெற்று இருந்து இவர்களின் திசை புத்தி நடைபெறும் காலங்களில் ஜாதகர் கோடீஸ்வரர் ஆக மாறுவது உறுதி ஆகும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்),
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email id
masterastroravi@gmail.com.
........
No comments:
Post a Comment