களத்திர ஸ்தானம்
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சாதக கட்டத்தில் ஏழாம் இடம் சிறப்பிடம் பெற்ற இடமாக கருதப்படுகிறது.தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை மற்றும் நட்பு நிலை பற்றி அறிய உதவும் மிக உன்னதமான ஸ்தானம் ஆகும்.
ஒருவர் தனக்கு அமையக்கூடிய தாய்,தந்தைகளையோ மற்றும் சகோதர சகோதரிகளையோ இன்னார் தான் வேண்டும் என தேர்ந்து எடுத்து கொள்ளும் உரிமையை இறைவன் நமக்கு தரவில்லை.
ஆனால் தனக்கு அமையக்கூடிய நண்பர்களையோ மற்றும் வாழ்க்கை துணையையோ தேர்ந்து எடுக்கும் உரிமையை மட்டும் நமக்கு இறைநிலை தந்து உள்ளது.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
"திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது"என்பார்கள்.
ஒருவரது சாதகத்தில் "ஏழாம் இடம் சுத்தமானால் எல்லோருக்கும் நல்லவர் "என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் நடை,உடை,பாவனை, மற்றும் பண்பு நலன்களை முடிவு செய்யக்கூடிய பெரும் பங்கு சாதகரது ஏழாம் இடம் ஆகும்.
ஏழாம் இடம் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணைக்கு லக்கனமாக கருதப்படுகிறது.
ஏழாம் இடத்தில் எவ்வித கிரகங்கள் இடம் பெறாமலோ அல்லது பாவ கிரகங்கள் இடம் பெறாமல் ஏழாம் இட அதிபதி இயற்கை சுப கிரகமாக இருக்கும் பட்சத்தில் நல்ல குணமான மனைவி வாழ்க்கை துணையாக அமையும்.
ஏழாம் இட அதிபதியின் தன்மையைக்கொண்டே தனக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவுகிறது.
ஏழாம் இடம் சர ராசியாக (மேஷம்,கடகம், துலாம் மற்றும் மகரம் ) இருக்கும் பட்சத்தில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை வெளியூரில் அமையும்.
ஸ்திர ராசி (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) எனில் உள்ளூரிலும்,
உபய ராசியாக (மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம்) இருப்பின் கொஞ்சம் காலம் உள்ளூரில் வசித்து பிறகு வெளியூரில் வசிக்கும் இல்லற துணை அமையும்.
ஏழாம் இடத்திலோ அல்லது ஏழாம் இட அதிபதியையோ சுப கிரகமாக இருப்பின் சொந்தத்தில் வாழ்க்கை துணை அமையும்.மாறாக பாவ கிரகமாக இருப்பின் அந்நிய உறவில் இல்லற துணை அமையும்.
ஏழாம் இட அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் கேந்திர, திரிகோணங்களில் அமைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதிர்ஷ்டமுள்ள வாழ்க்கை துணை அமையும்.
மாறாக ஏழாம் இட அதிபதி பாவ கிரகமாக இருந்து ஏழாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இடம் பெற்று இயற்கை மற்றும் ஸ்தான பாவ கிரகங்களால் பார்க்கப்பட தரித்திரமான இல்லற துணை அமையும்.
ஏழாம் இடத்திலோ அல்லது ஏழாம் இட அதிபதியும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை காதல் மற்றும் கலப்பு திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஏழாம் இடம் அதிபதி ஐந்து மற்றும் ஒன்பதாமிட அதிபதி உடன் தொடர்பு காதல் திருமணத்திற்கு வழி வகுக்கும்.
ஏழாம் இட அதிபதி சூரியன் மற்றும் புதன் உடன் சேர்க்கை பெற்று இருப்பின் அரசு வேலை பார்க்கும் வாழ்க்கை துணை அமையும்.
ஏழாம் இடத்தில் குரு+சந்திரன் சேர்க்கை ,
சந்திரன்+சுக்கிரன் சேர்க்கை,
சூரியன்+சந்திரன் சேர்க்கை , காமகாரக கிரகம் செவ்வாய் உடன் களத்திர காரகனான சுக்கிரன் சேர்க்கை இவை மட்டுமல்லாது சுக்கிரன், செவ்வாய் ஆகிய இவ்விரு கிரகங்களுடன் சனி,ராகு சேர்க்கை போன்ற மேற்கண்ட சேர்க்கைகள் லக்கனத்திற்கு ஏழாம் இடத்தில் காணப்பட்டால் தரம் தாழ்ந்த இல்லற துணை அமையும்.இயற்கை சுப கிரக பார்வை மற்றும் ஏழாம் இட அதிபதியினை பொறுத்து பலனில் மாறுபடலாம்.
ஏழாம் இடம் அதிபதி அஷ்டம ,விரய ஸ்தானமேறி ராகு பகவான் உடன் தொடர்பு கொண்டு ராகு திசையோ அல்லது ராகு வுடன் தொடர்பு கொள்ளும் திசை நடப்பில் இருக்கும் காலங்களில் திருமணம் நடப்பின் வெளிநாட்டில் வாழக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
இதேபோல ஏழாம் இட அதிபதி ஜல ராசி ,சர ராசி மற்றும் காற்று ராசியுடன் தொடர்பு கொண்டாலும் வெளிநாட்டு வாழ்க்கை துணை திருமண வாழ்வில் அமையும்.
லக்கனத்திற்குஅல்லது ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சனி, செவ்வாய் ,ராகு மற்றும் கேது போன்ற பாவிகள் இடம் பெற்று ஏழாம் அதிபதி மற்றும் லாபாதிபதியும் பலம் இழந்த அமைப்பு உடைய சாதகத்தில் எத்தனை தாரம் வாழ்க்கை துணையாக வந்தாலும் வாழ்க்கை துணை நிலைப்பதில்லை அல்லது இரண்டு அல்லது மூன்று தாரம் வாழ்வில் அமைகிறது.
உபய ராசிக்கு ஏழாம் அதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெறாமல் திரிகோண அல்லது மறைவிடங்களில் இடம் பெறத் நல்லது.மாறாக உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்ற அமைப்பில் இருப்பின் எதிர் தன்மையான வாழ்க்கை துணை அமையும்.
களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதி பகை, நீசம்,வக்கிரம் ,பகை மற்றும் மறைவிடங்களுக்கு குடியேறினாலோ அல்லது ஏழாமிடத்தில் மறைவு ஸ்தான அதிபதிகள் அல்லது சனி செவ்வாய் ,ராகு ,கேது போன்ற பாவ கிரக தொடர்பு பெற்றாலோ காலதாமத திருமணம் அமையும்.
ஏழாம் அதிபதி என்ன கிரகம் ? என்பதை பொறுத்தும் வாழ்க்கை துணையின் திசை அமையும்.
ஏழாம் அதிபதியானது
சூரியனாகில் கிழக்கு திசை,
சந்திரனாகில் வடமேற்கு திசை,
செவ்வாயாகில் தெற்கு திசை,
புதனாகில் வடக்கு திசை,
குருவானால் வடகிழக்கு திசை,
சுக்கிரனாகில் தென் கிழக்கு திசை,
சனியானால் மேற்கு திசை,
ராகுவானால் தென் மேற்கு திசை,
கேதுவானால் வட கிழக்கு திசை.
தனது வாழ்க்கை துணை உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி அறிய ஏழாம் இடத்திற்கு மூன்றாம் இடமான லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களின் எண்ணிக்கையினை பொறுத்து அறிந்து கொள்ளலாம்.
ஏழாம் அதிபதியை லக்கனமாக கொண்டு ஏழாம் இடத்திற்கு நான்காம் இடமான லக்கனத்திற்கு பத்தாம் இடத்தினை கொண்டு மாமியாரின் நிலை அறியப்படுகிறது.
தனக்கு வரும் வாழ்க்கை துணையின் தந்தை பற்றி அறிய களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமான, லக்னத்திற்கு மூன்றாம் இடத்து அதிபதி பற்றி ஆராய்ச்சி செய்து அறியவேண்டும்
ஏழாம் இடத்தில் அமரும் கிரகங்கள் மற்றும் ஏழாம் இட அதிபதி மை பொறுத்து நாம் மேற்கொள்ளும் தொழில் பங்குதாரர்களை முடிவு செய்யலாம்(Working partner).
ஏழாம் இடத்திலோ அல்லது ஏழாம் இட அதிபதியுடனோ சனி,ராகு பகவான் போன்ற பாவ கிரகங்கள் பார்வையோ அல்லது தொடர்போ பெறின் கூட்டு தொழில் ஆகாது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189646
செல்
9715189647
7402570899
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
......
No comments:
Post a Comment